வடக்கு மாகாணத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் வடக்கு மாகாண டெங்கு ஒழிப்பிற்கான மாகாண செயற்பாட்டுக்குழு அங்கத்தவர்களின் பங்களிப்புடன் நேற்று (ஜூலை 25) இடம்பெற்றது.
இக் குழுவில்;
கௌரவ ஆளுநர் – ஸ்தாபகர்
பிரதம செயலாளர் – தலைவர்
வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் – உபதலைவர்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் – பிரதம செயற்பாட்டு அலுவலர்
மாவட்ட செயலாளர்கள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்,
பாதுகாப்பு பிரிவின் தலைவர்கள் மற்றும் மாகாண பிரதான நிறுவன தலைவர்கள் -அங்கத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது, வடக்கு மாகாண, பிரதம செயலாளர் அவர்கள் டெங்கு நோய்த் தாக்கம் மற்றும் அதன் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார் அதனைத் தொடர்ந்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாகவும் மேலும் மாவட்ட ரீதியாக டெங்கு நோயின் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இலங்கையில் 2023 ஆம் ஆண்டு தை மாதம் முதல் ஆடி மாதம் வரையான காலப்பகுதியில் 54,177 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் துரதிஷ்டவசமாக 36 பேர் மரணித்துள்ளனர்.
வட மாகாணத்தில் 2023 ஆம் ஆண்டு தை மாதம் முதல் ஆடி மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்
யாழ் மாவட்டத்தில் 1,638
வவுனியா மாவட்டத்தில் 106
முல்லைத்தீவு மாவட்டத்தில் 84
கிளிநொச்சி மாவட்டத்தில் 74
மன்னார் மாவட்டத்தில் 70 பேருமாக வட மாகாணத்தில் மொத்தமாக 1,972 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில், யாழ் மாவட்டத்தில், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இறுதியாக டெங்கு ஒழிப்பிற்கான மாகாண செயற்பாட்டுக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக, எதிர்வரும் ஆவணி மாதம் 3 வது வாரம் டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ், கெளரவ வடமாகாண ஆளுநர் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.