வசாவிளானில் 36 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட 2 ஏக்கர் காணி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வலி வடக்கு வசாவிளான் கிழக்குப்பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணிகள் கடந்த திங்கள் (23/03) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன.

வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியில் உள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவப் பயன்பாட்டிற்காகக் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் ஒரு பகுதியே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை 511 படைப்பிரிவின் பிரிகேடியர் கேணல் பி.எம்.சி. வன்னிநாயக்க, யாழ். மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக மாவட்டச் செயலர்களான க. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இப்பகுதியில் ஏற்கனவே கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் 234.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக, சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த 2 ஏக்கர் காணி மட்டுமே  விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு மிக அருகாமையில் உள்ள இன்னும் சில தனியார் காணிகள் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டிலேயே காணப்படுகின்றன. நீண்டகாலமாகத் தமது பூர்வீக நிலங்களை இழந்து தவிக்கும் தமக்கு, எஞ்சியுள்ள காணிகளையும் விரைந்து விடுவிக்கத் தற்போதைய அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this Article
Leave a comment