யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் “மீற்றர்” பொருத்துவது கட்டாயமானது. அதேவேளை, முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் எந்தப் பயணிகள் சேவையையும் தடுக்க முடியாது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று(செப்ரெம்பர் 27) மாலை நடந்த விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் தற்போது சேவையில் ஈடுபடும் ஓர் தனியார் முச்சக்கரவண்டிச் சேவை தொடர்பாகப் பிரஸ்தாபித்தனர்.
அந்தத் தனியார் நிறுவனத்தில் பதிவு செய்து சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகள் குறைந்த கட்டணத்தை வசூலிக்கின்றன என்றும் அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் தெரிவித்தனர்.
அவர்களுக்குப் பதிலளித்த யாழ்ப்பாண மாவட்டச் செயலர், பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் “மீற்றர்” பொருத்த வேண்டும் என்பது சட்டம். அதில் எந்த மாற்றமும் செய்யமுடியாது. அதேவேளை, உரிய அனுமதி பெற்று மேற்கொள்ளப்படும் தனியார் நிறுவன பயணிகள் சேவையை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று பதிலளித்தார்.