யாழ்ப்பாணக் குடாநாட்டில் பயணிகள் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் கட்டாயமாக கட்டண மீற்றர் பொருத்தியிருக்கவேண்டும். அவ்வாறு பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு உள்ளூராட்சிமன்றங்கள் தரிப்பிடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று (மே 31) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்துவது தொடர்பில் வர்த்தமானியில் குறிப்பிடப்டப்பட்டுள்ள ஒழுங்குப் பிரகாரமே நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாவட்டச் செயலக உதவி மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். தற்போது முச்சக்கர வண்டிச் சங்கங்களையும் அழைத்து கலந்துரையாடி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கட்டண மீற்றர் பொருத்துவதற்கு ஒரே ஒரு நிறுவனம் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டண மீற்றருக்குரிய 27 ஆயிரம் ரூபா பணத்தை மாதாந்தம் 4 ஆயிரம் ரூபா வீதம் செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், மாதாந்தக் கட்டணம் அதிகம் என்றும் மாதாந்தம் 2 ஆயிரம் ரூபா வீதம் செலுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறும், இந்தக் கட்டண மீற்றருக்கு தவணை அடிப்படையில் செலுத்தும்போது வட்டி அறவிடாது கட்டணத் தொகையைத் தீர்மானிக்குமாறும் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் குடாநாட்டில் எந்தவொரு தரிப்பிடத்திலும் கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கரவண்டிகளுக்கு தரிப்பிடத்தில் இடம் வழங்குவதில்லை என்றும், கட்டண மீற்றரை தவணை முறையில் பெற்றுக்கொண்ட முச்சக்கர வண்டி சாரதிகள் தவணைப் பணம் உரிய முறையில் செலுத்தவில்லை என்றாலும் தரிப்பிடத்தில் இடம் வழங்கக் கூடாது என்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கட்டண மீற்றர் பொருத்தப்பட்ட பின்னர் முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் அதன் பின்னர் ஏனைய கிலோ மீற்றர்களுக்கான கட்டணம், தரித்து நிற்பதற்கான கட்டணம் என்பன தொடர்பில் விரைவில் ஆராயப்படும் என்று மாவட்டச் செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.