சுமார் 6 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் நேற்று (17) மின்தடை ஏற்பட்டமை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை கண்காணித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக 7 பேர் அடங்கிய குழு ஒன்றை மின்வலு அமைச்சர் டலஸ் அழகப்பெரும நியமித்தார்.
இந்த குழுவின் முதற் கூட்டம் இன்று (18) காலை இடம்பெற்றதுடன் அதன் பின்னர் அந்த குழுவின் அதிகாரிகள் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை கண்காணிக்க சென்றுள்ளனர்.
இதேவேளை, நேற்று ஏற்பட்ட மின் தடை குறித்து இன்று காலை அத தெரண ´பிஸ் போக்கஸ்´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை மினசார சபையின் தலைவர் விஜித்த ஹேரத் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
´நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள ´டிப்´ சுவிட்ச் செயலிழந்தது அதன் தொடர்ச்சியாக கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் டிப் சுவிட்ச்சும் செயலிழந்தது. அவை இரண்டும் செயலிழந்தமையே இதற்கு காரணம் ஏன அவர் கூறினார்.
இந்நிலையில் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் செயற்டபாடுகள் தற்போது வழமைப்போன்று இடம்பெறுவதாக மின்சார சபையின் முகாமையாளர் கிசிறி ஏகொடவத்த அத தெரணவிற்கு தெரிவித்தார்.
மேலும், நேற்று மின் விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துளள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய நிலைமையில் மின்சாரத்தை கவனமாக பாவிக்குமாறு நுகர்வோரை கேட்டுக்கொள்வதாக அந்த ஆணைக்குழுவின் தொலைத் தொடர்புகள் பிரிவு அதிகாரி ஜயனாத் ஹேரத் தெரிவித்தார்…