நாட்டில் கடந்த ஆண்டு ஒக்டோபரில் அதிகரிக்கப்பட்ட 18 சதவீத மின் கட்டணத்தை உள்நாட்டு பிரிவினருக்கு குறைக்கும் வகையில், மின் கட்டண திருத்தம் குறித்த புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர நேற்று தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தாலும், தொழில் மற்றும் ஹோட்டல் துறைக்கான கட்டணங்கள் 12 சதவீதத்தாலும், பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட பொது நோக்கங்களுக்கான கட்டணங்கள் 24 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டதாகவும் அவை யாவும் புதிய திருத்தத்தில் முற்றாக குறைக்கப்படும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான புதிய முன்மொழிவுகள் நாளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்றார்.
முன்னதாக இலங்கை மின்சார சபையானது கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்க முன்மொழிந்திருந்ததாக அவர் கூறினார்