காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகள் அடையாள விளம்பரத்தை காட்சிப்படுத்தப்பட்ட போது காணி உரிமையாளர்கள், மக்கள் அவ்விடத்தில் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நேற்று(செப்ரெம்பர் 6) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவமானது பேசாலை மேற்கு (மன்-55) கிராம அலுவலகப் பிரிவில் தனியார் காணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,காணி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தீவில் பேசாலை பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்திற்கு காணியை அடையாளப்படுத்தும் நோக்குடன் மன்னார் பிரதேச செயலகத்தில் இருந்து அதிகாரிகள் நேற்று காலை வருகை தந்து மன்னார் பிரதேச செயலாளரினால் அறிவுறுத்தப்பட்ட மும்மொழி கொண்ட அறிவுறுத்தல் விளம்பரம் சம்பந்தப்பட்ட காணியில் பார்வைக்கு ஒட்டப்பட்டது.
குறித்த அறிவித்தல் பிரசுரத்தில் ‘மன்னார் காற்று மின் செயற்றிட்டம் இரண்டாம் கட்டமாக தேவையான புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்குமே இக்காணி சுவீகரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை அறிந்த காணி உரிமையாளர்கள், பேசாலை பங்குத்தந்தை அருட்பணி அன்ரன் அடிகளார் உட்பட இக்கிராம மக்கள் சிலர் சம்பவ இடத்துக்குச் சென்று காணி அபகரிப்புக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில் மின் காற்றாலை அமைப்பதற்காக காணி அமைச்சிலிருந்து குறிப்பிட்ட காணியை அளவீடு செய்வதற்கு அறிவிப்பு வழங்குமாறு மன்னார் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டமையால் முதல் கட்ட நடவடிக்கையாக இது இடம்பெற்றுள்ளது.
ஆகவே இது தொடர்பாக காணி உரிமையாளர்கள் தங்கள் காணி என உரிமை கோரும் போது இப்பகுதி மக்களின் விருப்பு வெறுப்புகளை மன்னார் பிரதேச செயலாளர் ஊடாக எழுத்து மூலம் தெரிவிக்கும் பட்சத்தில் இதுதொடர்பில், உயர் மட்டம் பரிசீலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.