மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சந்திவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சட்டத்தரணிகளும், அரசியல்வாதிகள் சிலரும் அங்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டம் முடிந்து திரும்பும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்து சந்திவெளியில் பொலிசாரால் இடைமறிக்கப்பட்டு, மாணவர்களிடத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேரும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டக் களத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், எமது நிலங்களை ஆக்கிரமிக்காதே என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கலகமடக்கும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாக அப்பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.