புலமைப் பரீட்சையின் சித்தி வீதத்தை வடமாகணம் அதிகரிக்க வேண்டும்.
உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் கோரிக்கை.
வடமாகாணம் கல்வியிலே நிரந்தரமான அடைவு மட்டத்தைக் கொண்டிராது அடைவு மட்டம் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் காணப்படுகின்றது. இதனை மாற்றியமைத்து ஸ்திரமான நிலையை அடையச் செய்ய வேண்டும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் ப. தர்மகுமாரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடமாகாணம் தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் இலங்கையிலே முதலாவதாகவும் 70 புள்ளிகளுக்கு மேல் சித்தியில் குறைந்த நிலையிலும் உள்ளது. அதாவது இந்தப் பரீட்சையில் நூற்றுக்கு 72 சதவீதத்தினரே சித்தியடைந்துள்ளனர். 28 சதவீதத்தினர் சித்தியடையத் தவறியுள்ளனர். இதன் தாக்கம் க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் வெளிப்படக் கூடியதாக இருக்கும்.
இப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தொடர்ந்து வடமாகாணம் இறுதி நிலையிலேயே இருக்கின்றது. இந்த நிலமை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் 70 புள்ளிகள் பெறும் மாணவர்களின் புள்ளிகளை அதிகரிக்க வேண்டும்.
இம்முறை புலமைப்பரீட்சையில் கிராமப்புறப் பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. சித்தி வீதமும் அதிகரித்துள்ளது. அதேவேளை 70 புள்ளிகளை எட்டமுடியாத மாணவர்கள் வாசிப்பு, எழுத்து என்பவற்றில் பின்தங்கிய நிலையில் இருப்பதும் ஒரு காரணமாகும். அத்துடன் கிராமப்புற பாடசாலைகளுக்குப் பொருத்தமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அன்பாக இருத்தல், தரம் ஒன்றில் இருந்து தமிழை முழுமையாக கற்றுக் கொடுத்தல் போன்ற சிறிய விடயங்களில் கவனமெடுப்பதன் மூலம் எமது மாகாணம் கல்வியில் உயரும் நிலை உருவாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.