கொச்சியில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார், தனது 57 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு மலையாள மற்றும் தமிழ்த் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் திலீப் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது ஷாஜி குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். கொச்சியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (10/11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘உத்தமன்’ மலையாளப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான ஷாஜி குமார், தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலிமுருகன்’, ‘நரசிம்மம்’, ‘நரன்’, ‘ஒடியன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக, ‘புலிமுருகன்’ திரைப்படத்தின் காட்சியமைப்பில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
மலையாளத் திரைப்படங்கள் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் பிரசாந்த் நடித்த ‘பொன்னர் சங்கர்’, ‘மம்பட்டியான்’, ‘சாகசம்’ ஆகிய படங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான ஷாஜி கைலாஸ், ஜோஷி, வினயன், வைசாக் உள்ளிட்டோரின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.