2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பற்கான வழிகாட்டல் கையேடு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்க முடியுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த வழிகாட்டல் கையேட்டை பிரதேச மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட புத்தக விற்பனை நிலையங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வளாகம் மற்றும் அஞ்சல் மூலமும் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டல் கையேடு விற்பனை செய்யப்படும் புத்தக விற்பனை நிலையங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த முறை தேசிய பல்கலைக்கழக கட்டமைப்பிற்குள் சுமார் 45,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேலும் தெரிவித்தார்.