உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரான் குழுவை சேர்ந்த குண்டுதாரியான புலஸ்தினி பயங்கரவாதி சாரா புலனாய்வு பிரிவினரின் கண்களுக்கு மண்தூவி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னர், அவர் தப்பி ஓடியுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
சாய்ந்தமருதில் பயங்கரவாதிகள் தம்மை தாமே தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் அழித்துக் கொள்ள நடத்திய தாக்குதலில் பலியான 17 பேரில் பயங்கரவாதி சாராவும் பலியாகி விட்டதாக நம்பப்பட்டது. எனினும் இரண்டு முறை அவரது தாயாரின் இரத்த மாதிரி ஊடாக செய்யப்பட்ட மரபணு சோதனை பொருந்தியிருக்கவில்லை. இந்நிலையிலேயே அவர் தப்பி சென்றமை உறுதியாகியுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக புலனாய்வு வட்டாரங்களில் இருந்து தெரியவருவதாவது,
“மரபணு சோதனை பொருந்தாத நிலையில் புலனாய்வு பிரிவினர் அடுத்த கட்டமாக சாரா பிறந்த போது வைத்தியசாலையில் குழந்தை மாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கொண்டு அவர் பிறந்த களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் பழைய பதிவுகளான ஏடுகளை தேடி ஆராய்ந்தபோது அன்றை தினம் அந்த வைத்தியசாலையில் அவர் மட்டும் தான் பிறந்துள்ளதாக ஆவணங்கள் மூலம் கண்டறியப்பட்டதையடுத்து புலனாய்வு துறையினர் சாரா தப்பி ஓடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக முடிவுக்கு வந்தனர்.
அதன் பின்னர் தேசிய புலனாய்வுத் துறையினர் அவரை மீண்டும் தேடத் தொடங்கி, முதற்கட்டமாக சாராவின் ஊரான மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில் தேடினர். அதனை தொடர்ந்து சாராவின் சகோதரி கீதானவின் கணவரின் சகோதரன் தேவகுமார், சாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அவரை சி.ஜ.டியினர் கைது செய்தனர்.
அதேவேளை சாராவின் கணவரான பயங்கரவாதி முகமது ஹஸ்தூன் திருமணம் முடிப்பதற்கு முன்னர், அவருடன் தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவந்து முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவரை முஸ்லிம் மதத்திற்கு மதமாற்றம் செய்யமுற்படுவதாக சாராவின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யசென்ற போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் அந்த முறைப்பாடை விசாரித்த போது சாராவின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்தப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாங்காட்டில் தலைமறைவாகி இருந்த சாராவை அவர் காரில் ஏற்றி சென்றதாக தகவல் கிடைத்தது. இதன்படி கடந்த 13ம் திகதி அதிகாலை அவரையும் சி.ஜ.டியினர் கைது செய்துள்ளனர்.
தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இந்த தகவல்களின் அடிப்படையில் சாரா இந்தியாவுக்கு தப்பிய ஓடியுள்ளதாக நம்பப்படுகிறது.”.