மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாற்பது வட்டைக்குளத்தில் நடந்த படகு விபத்தில் ஆசிரியரும், மூன்று மாணவர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சோகச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நடந்துள்ளது என்று கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
களுவுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியரும், மாணவர்களுமே உயிரிழந்துள்ளனர். ஆசிரியரான 27 வயதுடைய யோகராசா கிபேதனும், மாணவர்களான தயாபரன் சஜிந்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் ஆகியோருமே உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் அனைவரும் 16 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் க.பொ.த. சாதாரண தரத்தில் கற்பவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
3 மாணவர்களும், 4 மாணவிகளும், ஆசிரியரும் இன்று காலை தாந்தாமலைப் பகுதிக்குச் சுற்றாலா சென்றபோது இந்த அனர்த்தம் நடந்துள்ளது.
இந்தச் சிறிய குளத்தில் ஆசிரியருடன் மாணவர்கள் சிறிய தோணியில் சென்றபோது தோணி கவிழ்ந்து நால்வரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
மாணவிகள் இந்தச் சம்பவத்தை அந்தப் பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் குளத்தில் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
தேடுதலில் ஆசிரியரதும், மாணவர்களினதும் உடல்கள் மீட்கப்பட்டன. அவை அரசடித் தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.