நாட்டில் கொரோனோ அச்சம் காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்த நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி சென்ற பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன தலைவர் – முகாமையாளர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என குறித்த நிறுவன நிதி மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (8) மாலை இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். மேலும்,
“பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன தலைவர் – முகாமையாளர் என கூறப்படும் கணவன் மனைவியான அ.ச.மொஹம்மட் சிஹாப் (வயது-46), பாத்திமா பர்ஸானா மாக்கார் (வயது-39) மற்றும் மகன் சி.அ. மொஹம்மட் வசீம் (வயது-10) இந்தியாவிற்கு சட்டவிரோதமாக படகு ஒன்றில் சென்ற நிலையில் நேற்று முன்தினம் (07) கைதாகியுள்ளனர்.
இவ்வாறு தப்பி சென்றவர்களின் கடவுச்சீட்டு நீதிமன்ற உத்தவின்படி மார்ச் 4ம் திகதி முடக்கக்கப்பட்டிருந்ததுடன் கல்முனை பொத்துவில் நீதிவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும் இவர்களிற்கு எதிராக 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறான நிலையில் நிலைமை மோசமடைவதை உணர்ந்த நிறுவனத் தலைவரான சிஹாப் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எழுத்து மூலமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி செலுத்துவதாக கடிதம் மூலம் அறிவித்தார். அத்துடன் சிலருக்கு காசோலையும் வழங்கி இருந்தார். ஆனால் அந்த காசோலை செல்லுபடியற்றிருந்ததுடன் காசோலையின் கணக்கும் முடக்கப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் குறித்த நிறுவன தலைவரான சிஹாப் தனது குடும்பத்துடன் யாழ்ப்பாணத்தில் உள்ள நபர் ஒருவருக்கு ரூபா 60 இலட்சத்தை செலுத்தி சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தப்பி சென்றிருக்கின்றார். அங்கு சென்ற அவர் இந்திய பொலிஸாரிடம் வியாபாரத்தில் நஷ்டம் என கூறி இருக்கின்றார். ஆனால் அவரிடம் எமது பணம் உள்ளதுடன் 200 கோடியை கல்முனையிலும் 1200 கோடியை நாடு முழுவதும் மோசடி செய்துள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் இயங்கி வந்த குறித்த நிதி நிறுவனம் கடந்த 6 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் கிளைகளை பரப்பி மோசடி செய்துள்ளனர்.” – என்று தெரிவித்தனர்.