நல்லூர் தீர்த்த தினமான செப்டம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கோரிக்கையை அவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் ஆகியோரிடம் முன்வைத்துள்ளார்.
இலங்கை வாழ் மக்களுடன் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்துக்களும் நல்லூர் திருவிழாவில் கலந்துகொண்டு பக்திபூர்வமாக வேண்டுதல்களைச் செய்து வருகின்றனர்.
25 நாட்கள் விரதம் இருந்து நல்லூர் முருகனை வணங்கும் பக்தர்கள், செப்டம்பர் 2ஆம் திகதியன்று தீர்த்த உற்சவத்துடன் விரதத்தை நிறைவு செய்கிறார்கள்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்த திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள், குறிப்பாக இந்து சமூகத்தினர், விடுமுறை பெற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
இந்த கோரிக்கையின் பிரதிகள் வடமாகாண தலைமைச் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ். கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன், மாவட்டச் செயலாளர் எம்.பிராதீபன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.