காங்கேசன்துறை – தையிட்டிப் பகுதியில் தனியார் காணியில் பெளத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், விகாரையைச் சுற்றியுள்ள பொதுமக்களமளின் காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சியை நிறுத்தக்கோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று(மே 3) புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகளின் மக்கள் பிரதிநிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை,யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 27 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் அதனுடைய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் இலங்கை இராணுவத்தின் இணையத்தளத்தில் சிலநாட்களுக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுவர்ண போதொட்ட கலந்து கொண்டு விகாரைக்கான கலசத்தை வைத்துள்ளார்.
இராணுவ இணையத்தளத்தின் பதிவில், காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விகாரையில் புனரமைக்கப்பட்ட ஸ்தூபி வைக்கும் பணி 27 ஏப்ரல் 2023 அன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சுவர்ண போதொட்ட சுப நிமிடத்தில், மகா சங்கத்தினரின் ‘பிரித்’ கோஷங்களுக்கு மத்தியில் கலசத்தை வைத்தார்.
யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் முயற்சிக்கு அமைய திஸ்ஸ விகாரையின் பிரதமகுருவான கிந்தோட்டை நந்தராம தேரர் விகாரை உருவாக்கப்பட்டது.
பண்டைய திஸ்ஸ விகாரையின் வரலாறு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்ட ஒரு பௌத்த விகாரையாக இயங்குகிறது. மகாசங்கத்தினர், உத்தியோகத்தர்கள், ஏனைய அணியினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினரின் அயராத முயற்சியால் இந்த ஸ்தூபியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தன-என்றுள்ளது.
பொதுமக்களின் காணிகள் வலி வடக்கில் குறிப்பிட்ட அளவு விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று வரை முற்று முழுதாக விடுவிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், சிறிலங்கா படையினரால் கையகப்பபடுத்தப்பட்டுள்ள நிலங்களில் தமிழர் அடையாளங்களை அழித்து அங்கு பௌத்த சின்னங்களை உருவாக்கி பிரதிஷ்டை செய்யும் செய்பாடுகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் இடம்பெறுகின்றன.