ஐரோப்பாவின் யூரோ பொது நாணயத்தை ஒத்த டிஜிற்றல் நாணயம் ஒன்றை உருவாக் குவதற்கு ரஷ்யா தலைமையிலான நாடுகள் தயாராகி வருகின்றன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் “பிறிக்ஸ்” கூட்டணி அமெரிக்க டொலரின் உலகளாவிய இருப்புக்கு சவால் விடும் வகையில் சர்வதேச வர்த்தக கொடுப்பனவுகளை செய்வதற்கான இந்தப் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜொகன்னஸ்பேர்க்கில் வரும் ஓகஸ்டில் நடைபெறவுள்ள பிறிக்ஸ் உச்சிமாநாட்டின்போது ஐந்து நாடுகளின் கூட்டமைப்பு ஒரு புதிய நாணயத்தைப் புழக்கத்துக்கு விடுவதைக் கூட்டாக முடிவு செய்யும்.
பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் பொதுவான பிறிக்ஸ் நாணயத்தை வெளியிடுவதில் முனைப்பாக இருக்கின்றன. ஆனால், புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டங்களில் ஆர்வம் காட்டாத ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்த மாதத் தொடக்கத்தில் கருத்து வெளியிட்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் பிறிக்ஸ் நாணயம் தொடர்பாக இந்தியாவிடம் திட்டம் எதுவும் கிடையாது என்று தெரிவித்திருந்தார்.
இந்தியா அதன் தேசிய நாணயமான ரூபாயை பலப்படுத்துவதிலேயே முழுக் கவனத்துடன் செயல்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
இதேசமயம்- தங்கத்தைப் பின்புலமாகக் கொண்ட பிறிக்ஸ் பொது நாணயத்தை ஏற்றுக் கொள்வதற்கு அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, எகிப்து, மெக்ஸிக்கோ, நைஜீரியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு விருப்பம் தெரிவித்துள்ளன. மேலும், பல நாடுகள் இந்தப் பொது நாணயத்தோடு இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.