தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகளை வழங்கும் பரிசளிப்பு விழா தந்தை செல்வா கலையரங்கத்தில் நேற்று(மார்ச் 18) நடைபெற்றது.
இந்த விழாவில் கடந்த ஆண்டு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்கள் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகளும், 2022 ஆம் ஆண்டின் சிறந்த சூழல் நேயச் செயற்பாட்டாளர் தால காவலர் மு.க.கனகராசா ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் 2022 ஆம் ஆண்டில் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாணாக்க உழவர் மதிப்பளிப்பும், இராசதானியத் திட்டத்தின் கீழ் சிறுதானியச் செய்கையைச் சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு மாண்புறு உழவர் மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
பிரதம விருந்தினராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் விஞ்ஞானத் துறையின் தலைவர் பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன், வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ச. சர்வராஜா கலந்து கொண்டனர்.