முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று (மே 17) காலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (மே 17) அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் சமகி ரணவிரு பலவேகவின் தலைவராக மகேஷ் சேனாநாயக்க இன்று எதிர்க்கட்சி தலைவரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் நான்கு கட்டங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க 2017 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி இராணுவப் பிரதானியாக நியமிக்கப்பட்டார், பின்னர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் இலங்கை இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்றிருந்தார்.
அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21 திகதி ஜெனரலாக பதவி உயர்வு பெற்று இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.