கொழும்பு துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உடுவிலைச் சேர்ந்த நபரிடம் வாள், போலி இலக்கத் தகடு, 5000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுக்கு உதவியவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 10) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல்களுக்கமைய, குறித்த சந்தேக நபர் காரில் பயணித்த போது இந்த அதிரடிக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேக நபர் பயணித்த காரில் இருந்து ஒரு வாள், சுமார் 5,000 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், காவல்துறையினரின் விசாரணையில் குறித்த கார் போலி இலக்கத் தகடுகளைக் கொண்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு வாகன உதவி புரிந்தார் என்ற அடிப்படையிலேயே முப்பது வயது மதிக்கத்தக்க குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான இந்த நபருக்கு யாழ்ப்பாணத்தில் இயங்கும் வன்முறைக் கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறையினர், தற்போது சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி இலக்கத் தகடு, ஆயுதம் மற்றும் போதைப்பொருள் என்பன தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன், அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு விசேட காவல்துறைக் குழுவினரிடம் அவர் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இதேவேளை, கொட்டாஞ்சேனைத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூவர், ஏற்கனவே கொழும்பிலிருந்து வந்த விசேட காவல்துறைக் குழுவால் மேலதிக விசாரணைக்காகக் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article