கிளிநொச்சி மாவட்டத்தில் “தூய்மையான பசுமையான நகரம்” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று(பெப்ரவரி 6) முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் பேரணி 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவின் ஓர் அங்கமாக, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் “தூய்மையான பசுமையான நகரம்” எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைய கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்றது.
போதைப் பொருளற்ற சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகள் தொடர்பான பதாதைகளை ஏந்தியவண்ணம் கலந்து கொண்டனர்.
போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் நோக்குடன் கனகபுரம் பொருளாதார மத்திய நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணியானது கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்துக்கு சென்று இறுதியாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை வந்தடைந்தது.
மேலும் இதன்போது, போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல் மற்றும் மரம் நடுகை தொடர்பான அறிவுறுத்தல் அடங்கிய ஸ்டிக்கர்களை கரைச்சிப் பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.திருலிங்கநாதன் அவர்களிடம் கையளித்தார்.
தொடர்ந்து மாவட்டச் செயலக முன்பகுதியில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கரைச்சி பிரதேச செயலர், கரைச்சி உதவிப் பிரதேச செயலர், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்டச்செயலக உத்தியோகத்தர்கள், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப்பணிப்பாளர் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினர், பிரதேச இளைஞர் கழக அங்கத்தினர், NAITA நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்கள், World Vision நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் திட்டத்தின் ஏனைய பங்குதாரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
“தூய்மையான பசுமையான நகரம்” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மரங்கள் நாட்டுதல், நகரப் பகுதிகளை சுத்தப்படுத்துதல், கழிவு பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தல், நகர் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமான வீதி நாடகங்கள், அறிவிப்புக்கள், உள்ளிட்டபல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், விளையாட்டு நிகழ்வுகள், நகர்புற சுவர்களுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தல் முதலானவை முன்னெடுக்கப்படுகின்றது.