காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாடு இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமான சண்டே டைம்ஸ்க்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
படகு சேவைக்கு இலங்கை உதவிகள் வழங்கும் என்றும் , அது இந்திய அதிகாரிகளால் கையாளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்வரும் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளுக்கான களஞ்சிய வசதிகள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் உட்பட சுங்கப் பகுதி மற்றும் குடிவரவுப் பகுதிகளை காங்கேசன்துறையில் நிர்மாணிப்பதற்காக 100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இந்த படகு ஒரே நேரத்தில் 120 பயணிகளை ஏற்றிச் செல்லும். ஒரு நாளைக்கு ஒரு பயணம் மட்டுமே காங்கேசன்துறைக்கு சென்று திரும்பும்.
ஒரு பயணத்துக்கு (இரு வழிகளிலும்) இந்திய ரூபாய் 9,000 (இலங்கை ரூபா 37,000) செலவாகும். ஒரு பயணி அதிகபட்சமாக 100 கிலோகிராம் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான படகு சேவையை விரைவில் தொடங்க இந்தியா ஆர்வமாக உள்ளது என்று இந்தியத் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான படகுச் சேவை முன்னர் தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு 1981ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.