கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் 4 சிசு மரணங்கள் ஏற்பட்டுள்ளமையும், இளம்தாய் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமையும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பாதிக்கப்பட்ட தரப்பினர் இது தொடர்பாகக வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மருத்துவர்களின் அக்கறையின்மையும், உரிய நேரத்தில் சிகிச்சைகள் வழங்காமையுமே இவற்றுக்குக் காரணம் என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டிருந்தவர்களின் நான்கு சிசுக்களே உயிரிழந்துள்ளன. அதேநேரம் இளம்தாய் ஒருவரின் கர்ப்பப் பையும் அகற்றப்பட்டுள்ளது.
சிசுக்கள் இறந்த சந்தர்ப்பத்திலும், தாயின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சந்தர்ப்பத்திலும் பயிற்சி மகப்பேற்றியல் வைத்திய நிபுணர் ஒருவரே சம்பந்தப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கேட்டபோது, இந்தச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று உறுதிப்படுத்தினார். இந்தச் சம்பவங்கள் தொடர்பான ஆரம்பப் புலன்விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.