உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டாம் – அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது இடையூறு விளைவிக்கவோ வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (26/02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பயங்கரவாத தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின. உயிரிழந்தவர்களில் அனைத்து மதத்தவர்களும், அனைத்து இனத்தவர்களும் அடங்குவர். இது ஒரு திட்டமிட்ட மனிதப்படுகொலை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிவது என்பது, இந்த நாட்டில் சட்டம் சரியாகச் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஒரு விடயமாகும். அவ்வாறு உண்மை கண்டறியப்படாவிட்டால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற அச்சமற்ற நிலை உருவாகும்.

புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது மற்றும் தற்போதைய விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினர் தமக்குச் சாதகமான வியாக்கியானங்களை அளித்து வருகின்றனர்.

இவர்களின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் சுதந்திரமான விசாரணை. எனவே, இதனை அரசியல் மயமாக்காமல் விசாரணைகளை அதன் போக்கில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும்.

விசாரணைகளைக் குழப்ப முயற்சிப்பதானது, இத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும்.

மக்கள் அனைவரும் பொறுமையுடன் காத்திருந்து உண்மைகள் வெளிவர ஒத்துழைக்க வேண்டும். இதன் பின்னணியில் அரசியல் சதி இருந்ததா? அவ்வாறு இருந்தால் அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது நிச்சயம் கண்டறியப்பட வேண்டும். யாராவது இதற்குத் தடையாக இருந்தால், அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் மற்றுமொரு குற்றமாகவே நாம் கருதுவோம். எனவே, புலனாய்வுப் பிரிவினர் தமது பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்க அனைவரும் இடமளிக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Share this Article