அண்மைய சில ஆண்டுகளில் சீனா இலங்கையில் பெருமளவான முதலீடுகளை மேற்கொண்டிருக்கின்றது. அதன்படி எதிர்வருங்காலங்களில் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மையளிக்கக்கூடிய தொடர்புகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனா சென்ற வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை சீனாவின் ஒரு மண்டலம், ஒரு பாதை செயற்திட்டமே இலங்கையைக் கடன்பொறிக்குள் தள்ளியிருப்பதாக சில மேற்குலக ஊடகங்களால் வெளியிடப்பட்டுவரும் செய்திகளையும் அமைச்சர் சப்ரி மறுத்துள்ளார்.
‘சில ஊடகங்கள் இதனைத் தமது நலனை மேம்படுத்திக்கொள்வதற்காகப் பயன்படுத்துகின்றன. சீனாவின் முதலீடுகள் எமக்கு மிகவும் முக்கியமானவையாகும். இலங்கை சுமார் 26 வருடகாலமாகக் கடும் அழுத்தத்துக்கு முகங்கொடுத்திருந்தது. முதலீடுகளின் உட்பாய்ச்சல் இடம்பெறவில்லை. இருப்பினும் சீனா முதலீடுகளை மேற்கொண்டதுடன், அது இலங்கையின் வளர்ச்சிக்குத் தூண்டுதலளித்தது’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இலங்கையில் கட்சி எல்லைகளுக்கு அப்பால் அனைவரும் சீனாவுடன் நல்லுறவைக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு யார்மீதும் குற்றஞ்சுமத்தப்போவதில்லை என்றும், அதற்கான பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், தாம் கொள்கை ரீதியில் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்ததாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார். ‘நாம் தற்போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருப்பதுடன், அவற்றிலிருந்து மீட்சியடைந்து, நிறைபேறான வழியில் முன்நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.