இன்று (ஜீலை – 26 – 2021) அகவை அறுபதை பூர்த்தி செய்யும் நெடுந்தீவு மத்தி சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயமானது தனது வரலாற்றுப் படிகளில் கடந்து வந்த வேதனைகளும், சோதனைகளும் அதே போல் சாதனைகளும் ஏராளம். கொரோனா எனும் கொடுர அரக்கனின் கோரப் பிடியில் அகிலமும் மானிட சமூகமும் சிக்கி சீரழிந்து மரண பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ் வேளையில் தமது பாடசாலையின் மணி விழாவினை மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட முடியாது பாடசாலை சமூகமானது கவலையடைந்திருக்கும் நிலையில் பாடசாலையின் அரம்ப வரலாற்றை மிக சுருக்கமாக திரும்பிப் பார்க்கின்றோம்.
1960ம் ஆண்டு ஆவணி மாத நடுப்பகுதியில் தமது சமூக மக்களுக்கு ஆரம்ப பாடசாலை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணக் கருவினை அன்று நெடுந்தீவின் ஏழாம் வட்டார கிராம சபை (தற்போதைய பிரதேச சபை) உறுப்பினரும் கிராம முன்னேற்ற சங்க உறுப்பினருமாக இருந்த பிரபல சமூக சேவையாளர் நீக்கிலாஸ் வின்சென்ற் அவர்களும் அவரது சகோதரரும் நு/மஸ்கெலியா புனித சூசையப்பர் கல்லூரி பதில் அதிபருமாகவிருந்த நீக்கிலாஸ் செபதேயு (செபடியாஸ்) அவர்களும் அன்று நெடுந்தீவின் கத்தோலிக்க ஆலயங்களின் பங்குத் தந்தையாகவிருந்த அருட்திரு.லியோ யோசேப் அடிகளாரிடம் தெரிவித்திருந்தனர். அவரது ஆசியுடனும் சில வழிகாட்டல்களுடனும் ஓர் பாடசாலையினை ஆரம்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஆசிரியர்களான சூசைப்பிரகாசம் மனுவேற்பிள்ளை (சின்னராசா மாஸ்ரர் றோ.க ஆண்கள் வித்தியாலயம் நெடுந்தீவு) சீமான் யுவக்கிம் (சுவக்கீன் மாஸ்டர் – றோ.க ஆண்கள் வித்தியாலயம் நெடுந்தீவு) ஆகியோரது ஒத்துழைப்பு பெறப்பட்டு பாலர் வகுப்பு தொடக்கம் 4 வரையான தமது சமூக மாணவர்கள் றோ.க.ஆண்கள் பாடசாலையிலும் றோ.க.பெண்கள் பாடசாலையிலும் கற்று வந்தமையால் பெற்றோர்களின் பூரண விருப்பத்துடன் அப்பாடசாலைகளில் இருந்து விலக்கி (சுமார் 57 மாணவர்கள்) அம் மாணவர்களைக் கொண்டு 1961ம் ஆண்டு ஆடி மாதம் 26ம் திகதி புதிய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. கஸ்பார் அருளானந்தம், ஜேக்கப் அருளானந்தம், மரியான் லோறன்ஸ், ஆகிய பெற்றோரும் மாணவர்களை புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.
மாணவர்கட்கு சமூக ஒழுக்க விழுமியங்களையும், கல்வியறிவையும் கட்டாயமாக போதிக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்த பங்குத்தந்தை அருட் திரு. லியோ பிரான்சிஸ் அடிகளார் எமது புதிய பாடசாலை ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து செயற்படவும் பூரண ஒத்துழைப்பு வழங்கியதுடன் புதிய பாடசாலையில் தமது பிள்ளைகளை இணைத்துக் கொள்வதற்காக அப்போது கற்று வந்த பாடசாலைகளில் இருந்து விலக்க முயற்சித்த போது அப்பாடசாலையின் அதிபர்கள் மறுப்புத் தெரிவித்த போதும் அவர்களுடன் கதைத்து மாணவர்களை புதிய பாடசாலையில் இணைத்துக் கொள்ளவும் பேருதவி புரிந்தனர்.
புனித யாகப்பரின் வருடாந்த திரு நாளை ஆவணி மாதம் 25ம் திகதியின் பின்வரும் 26ம் திகதி தூய அன்னம்மாள் (மரியன்னையின் தாயார்) திருநாள் தூய யாகப்பர் ஆலயத்தில் வருடாந்தம் கொண்டாடப்படுவது வழக்கமாகும். எனவே அன்றைய தினம் (26.07.1961) திருநாளன்று (தூய அன்னம்மாள் திருநாள்) திருவிழா விஷேட புசைப்பலியுடன் 57 மாணவர்களுடன் தூய யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆலய பரிபாலகராக இருந்த திரு.தியோகு கமிலன் (நல்லையா அண்ணன் – கபிலர்) தூய அன்னம்மாள் சபை மத்ரோனாவாக இருந்த திருமதி இராசேந்திரம் திரேசம்மா (அருமை ஆச்சி) உதவி மத்ரோனாவாக இருந்த செல்வி மாக்கிரேட் (அம்மாப்பிள்ளை அக்கா) ஆகியோரும் பாடசாலை ஆரம்ப தினத்தன்று மிகவும் உற்சாகமாக பணியாற்றினர். பாடசாலை ஆரம்பிப்பதற்கும் தொடர்ந்து இயங்குவதற்கும் சுமார் இருநூறிற்கும் மேற்பட்டவர்கள் பங்களிப்பு செய்திருந்தனர்.
பாடசாலை புனித அன்னம்மாள் திருவிழா அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதால் புனித அன்னம்மாள் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை என்று பங்குத் தந்தை அவர்களால் நாமம் சூட்டப்பட்டது. பாடசாலைக்கு சொந்த காணி இல்லாமையால் தற்காலிகமாக புனித யாகப்பர் ஆலயத்திலும் பின்னர் புனித யாகப்பர் வளாகத்திலும், தென்னங்கீற்று கொட்டகை அமைக்கப்பட்ட பாடசாலை இயங்கி வந்தது. அதன் ஆசிரியர்களாக திருமதி அடைக்கலமுத்து அருளம்மா (சின்னமணி ரீச்சர்), மத்தியான் எலிசபேத் (கிறேஸ்- திருமதி அருளப்பு) தொம்மன் மரியம்மா (பொன்னம்மா திருமதி அந்தோனிப்பிள்ளை) திரு.அடைக்கலம் லியோ பிரான்சிஸ் (ஆங்கில ஆசிரியர்) திரு.அந்தோனி கிறிஸ்தோப்பர் ஆகியோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பாடசாலை பரிபாலன சபை செயலாளராக லோறன்ஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். திருமதி வைத்தியனாதன் அந்தோனிப்பிள்ளை (முத்தாச்சி) மாணவர்களுக்கான பால்மா கரைத்துக் கொடுப்பவராகவும் பணியாற்றினார். ம.லோறன்ஸ் அவர்களைத் தொடர்து க.அருளானந்தம் அவர்கள் பாடசாலை பரிபாலன சபை செயலாளராக பல வருடங்கள் செயலாற்றி பாடசாலையின் துரித வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒப்பற்ற சேவையாற்றினார்.
1962ம் ஆண்டு பங்குனி 21ம் திகதி திரு.நீ.வின்சென்ற், திரு.லீ.செபதேயு சகோதரர்களும், தொம்மை மாகாளிதன் பிள்ளை தம்பதியினரும் தங்களது அப்பாத்தை பள்ளம் எனும் காணியின் பங்குரிமைகளை பாடசாலைக்கு நன்கொடையாக அளித்தனர். எனவே 1962ம் ஆண்டு சித்திரை மாதம் அங்கு தென்னங் கீற்றுக்களால் வேயப்பட்ட கொட்டகை அமைக்கப்பட்டதுடன், திரு.மெதார்த்தப்பு (லாத்தப்பு) திரு.எஸ்.அல்பிரட் (பொன்ராசா) ஆகிய கட்டிடக்லைஞர்கள் இலவசமாக கொட்டகைக்கான தூண்களை அமைத்துக் கொடுத்தனர். 1962ம் ஆண்டு வைகாசி மாதம் 02ம்திகதியிருந்து இப்போதும் இயங்கி வரும் இடத்திலேயே நிரந்தரமாக இயங்கி வருகின்றது. பின்னர் திரு.காபிரியேற்பிள்ளை டானியல் (பேபி அண்ணன்) என்பவரும் அதே காணியில் மேற்குப் பகுதியில் உள்ள தனது பங்கின் சிறுபகுதியினையும் நன்கொடையாக வழங்கியதுடன் பாடசாலையின் வடக்கு பக்கமாக திருமதி ஜக்குலின் கஸ்பஸ் ஜெயதாஸ் என்பவரிடம் இருந்து காணியின் ஓர் பகுதி பாடசாலை நிர்வாகத்தால் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் நான்கு கட்டிடத்தொகுதிகளையும் தற்போது கொண்டிருக்கின்றது.
1965ம் ஆண்டு தை மாதம் 01ம் திகதி இலங்கை அரசாங்கத்தால் இப்பாடசாலை சுவிகரிக்கப்பட்டது. அன்றிலிருந்த இன்று வரை யா.நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க.வித்தியாலயம் என அழைக்கப்படுகின்றது. 1965ம் ஆண்டு அதிபராக இளவாலையிலிருந்து திரு.சரவணமுத்து ஹென்றி என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். வகுப்புக்கள் 05வரை நடைபெற ஆரம்பித்தன 1966ம் ஆண்டு இரணைதீவிலிருந்து ம.செபமாலை என்பவர் அதிபராக இப்பாடசாலையில் நியமனம் பெற்றார். 1965ம் ஆண்டு ஆடி மாதம் 01ம் திகதி இப்பாடசாலையின் தொணடர் ஆசிரியர்களாக கடமையாற்றிய திருமதி மரியம்மா தொம்மை என்பவரும், திரு.அந்தோனி கிறிஸ்தோப்பர் என்பவரும் 1964ம் ஆண்டு முதல் தொண்டராசிரியாக பணி புரிந்த செல்வி எலிசபேத் நிக்கிலஸ் என்பவரும் ஆசிரியர்களாக நியமனம் பெற கடமையுணர்வுடனும் சேவை மனப்பாங்குடனும் கடைமையாற்றி வந்த திருமதி அருளம்மா அடைக்கலமுத்து திரு.அடைக்கலம் லியோ பிரான்சிஸ் என்பவர்கள் மாணவர்களது எண்ணிக்கை போதுமானதாக இல்லை எனும் காரணத்தால் நியமனம் கிடைக்காமை துயருடன் விலகிச் சென்றனர். மற்றோர் ஆசிரியரான செல்வி எலிசபேத் மத்தியாஸ் என்பவர் திருமணம் செய்து கொண்டமையால் தானகவே முன்பே விலகி திருமலை சென்று விட்டார். பாடசாலையில் நடன ஆசிரியராகவும், தென்னிந்தியாவிற்கு சென்று பயிற்சி பெற்று வந்த வருமான நாட்டியக் கலைஞர் திரு.அடைக்கலம் கென்யூட் (கனியூட்) இப்பாடசாலை மாணவர்களிற்கு பரதம் மற்றும் நடனக் கலைகளை பயிற்று வித்து தீவிலும் வடமாகாணத்தின் பல பகுதியிலும் இம் மாணவிகட்கு அரகேற்றமும் செய்திருந்தார். இவர் நடனக் கலைஞர் வேல் ஆனந்தனின் கிளிநொச்சி நடன ஆசிரியை கலை நர்த்தகி செல்வி பராசக்தி கந்தையா ஆகியோரது சக மாணவருமாவாள் அத்துடன் நடன இணை ஜோடியாக பராசக்தியும் கென்யூட்டும் இணைய பல நடன நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
தனது சமூகத்திற்கு வேலை செய்ய வேண்டும் எனும் நோக்குடன் 1967ம் ஆண்டு திரு.நீக்லாஸ் செபதேயு (செபடியாஸ்) அவர்கள் நுஃமஸ்கெலியா புனித சூசையப்பர் கல்லூரியில் இருந்து இப் பாடசாலைக்கு சுயவிருப்பின் பேரில் இடமாற்றம் பெற்ற வந்தார். 1973ம் ஆண்டில் செல்வி மெக்டலின் ஜோசேப் (ஞானமணி ரீச்சர்) அதிபராகவும் அதன் பின்னர் அந்தோனி கிறிஸ்தோப்பர் திரு.ஹென்றி அன்ரன் மரியதாஸ் திரு.சச்சிதானந்தம் ஆகியோர் அதிபர்களாக பணியாற்றி சென்றுள்ளனர். இன்று தொடர்சியாக திருமதி யோ.பாக்கியராணி அவர்கள் கடமையாற்றி வருகின்றார். திரு.செபதேயு அவர்கள் காலத்தில் தரம் 05இல் இருந்து தரம் தரம் 07வரையும் திரு.ஹென்றி அன்ரன் மரியதாஸ் அவர்கள் காலத்தில் தரம் 09வரையும் வகுப்புக்கள் நீடிக்கப்பட்டன.
இன்று சுமார் 14 ஆசிரியர்களையும் 89 மாணவர்களையும் கொண்டு இப்பாடசாலை சிறப்பாக இயங்கி வருவதுடன் மனையியற்கூடம், விஞ்ஞான ஆய்வு கூடம், முறைசாரக் கல்வி தொழிற்பயிற்சிக்கூடம், என்பவற்றுடன் காணப்படுவதுடன் மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுப் போன்றவற்றில் பல சாதனைகளையும் நிலை நாட்டி வருகின்றனர் அவ்வப்போது ஆனி ஆடி மாதங்களில் வருகின்ற சோழக் காற்றால் வெட்டுக்களி ஏரியிலிருந்து வீசும் கோரப் புழுதியால் மாணவர்களது கற்றல் உபகரணங்கள் தளபாடங்கள், கட்டிடங்கள் பாதிக்கப்படுவதுடன் உவர் புழுதியானது மூக்கு, தொண்டை மற்றும் சவாச நோய்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுகின்றனர். மூக்கு காது போன்றவற்றிலிருந்து குருதிக்கசிவு, தலையிடி போன்றவையும் ஏற்பட்டு அசெகளரியங்களை ஏற்படுத்தி வருகின்றது.
மாணவர்களுக்கான இடப்பற்றாக்குறையும் விளையாட்டு மைதானம் இன்மையும் மாணவர்கள் உடல் உளச் செயற்பாடுளில் பெரும் தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றது. எனவே அருகில் காணப்படும் திடலாக காணப்படும் விதானைத்தறை எனும் காணியின் உரிமையாளர்கள் இப்பாடசாலை மாணவர்களுக்கு அக்காணியினை வழங்குகின்ற போதும் மாணவர்கள் தங்கள் அறிவியல் மற்றும் விளையாட்டு செயற்பாடுகளில் நிகரற்ற சாதனைகள் புரிவார்கள் என எதிர்பார்க்கலாம். வெட்டுக்களிப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது மாணவ சமுதாயத்தை மேலும் மேன்மையுறச் செய்யும். எனவே ஆண்டு அறுபதினைப் பூர்த்தி செய்யும் இவ்வேளையில் இவற்றிற்கும் தீர்வு காண்டு அவர்களது எதிர்காலத்தினை ஒளிமயமாக்கி ஒன்றிணைய அனைவரும் கைகோர்ப்பம்.