இலங்கையின் பல பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் (26) பலத்த மழை மற்றும் கடுங் காற்றுடன் கூடிய காலநிலை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் திருகோணமலைக்கு வடகிழக்காக 350 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது இன்று இலங்கையை கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தாழமுக்கம் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரை பதிவாகக்கூடும்.
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.