இலங்கை கடற்பரப்பில் அண்மைக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில், சுமார் 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களாக ஆழ்கடல் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, பேருவளைக்கு அப்பால் தென்மேற்கு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த பலநாள் மீன்பிடிப் படகு ஒன்றை கடற்படையினர் இடைமறித்து திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 298 உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் கண்டறியப்பட்டது.
இதன் மொத்த நிறை 300 கிலோகிராமுக்கும் அதிகம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதன்
சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 6,252 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக படகிலிருந்த 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.