2006 ல் அல்லைப்பிட்டியில் சிறீலங்கா ராணுவம் ,கடற்படை மற்றும் ஒட்டுக்குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட அறுபது பொதுமக்களின் நினைவாகவும் , கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கத்தோலிக்க அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளாரின் நினைவாகவும் மே 18 அன்று அல்லைப்பிட்டி கத்தோலிக்க சேமக்காலையிலும் , அதன் அருகில் உள்ள ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீட்டின் முன்பும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது .
மேற்படி சேமக்காலையின் முன்பாக அமைந்துள்ள வீதி முழுவதும் ராணுவத்தினரும் , புலனாய்வு பிரிவினரும் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களது கண்ணில் மண்ணை தூவி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .
முன்னாள் வடக்கு மாகணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பிரமுகர் கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேச சபை உறுப்பினர்களான பிலிப் பிரான்சிஸ், கருணாகரன் நாவலன் மற்றும் மேற்படி படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் பல உறவினர்களும் கலந்துகொண்டிருந்தனர்