யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (23.12.) அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள்,மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பானசேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள்,திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்று இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மேலும், துணி பை, முதியவர்களுக்கான அத்தியாவசியப் பொதிகள், மரக்கன்றுகள் என்பன வழங்கப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் நினைவு மரக்கன்றும் நாட்டப்பட்டது.
இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர், ஒருங்கிணைப்புக்குழுவின் பிரதேச இணைப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலகத்தினுடைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.