இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரில் ஒருவருக்கு இரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 26 தமிழக மீனவர்களில் நால்வர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்தனர். ஏனைய 22 பேர் தொடர்பான வழக்கு நேற்று (நவம்பர் 15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மீனவர்களில் ஒருவர் ஏற்கனவே எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட 18 மாதச் சிறைத் தண்டனையுடன் விடுவிக்கப்பட்டவராவார்.
வழக்கை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் ஜே.கஜநிதிபாலன், தமிழக மீனவர் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைக் காலத்தில் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததை அடுத்து அவரைச் சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஏற்கனவே அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 18 மாதச் சிறைத் தண்டனையும் விதித்தார்.
தமிழக மீனவர் இப்போது விதிக்கப்பட்ட 18 மாதச் சிறைத் தண்டனையை 6 மாத ஏக காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் முன்னதாக விதிக்கப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையுடன் சேர்த்து 24 மாத சாதாரணத் சிறைத் தண்டனை விதித்தார் நீதவான்.
ஏனைய 21 மீனவர்களுக்கும் 5 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதச் சாதாரண சிறைத் தண்டனை விதித்து அவர்களை விடுதலை செய்தது நீதிமன்றம்.
மீனவர்கள் பயணித்த 4 படகுகளின் உரிமையாளர்கள் தொடர்பான சான்றாதாரங்களை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மன்றில் சமர்ப்பிக்காத காரணத்தால் வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.