திருகோணமலை மாவட்டத்தில் வரலாறு காணாத பாரிய அழிவினை மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு ஏற்படுத்திவிடும் என அச்சம் வெளியிட்டு வந்த சூழ்நிலையில் நேற்று (நவம்பர் 30) அணைக்கட்டின் மேல் பகுதி உடைப்பெடுத்து வெள்ள நீர் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து வருகின்றது.
வெள்ளப்பெருக்கின் காரணமாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உப்பூறல், பூநகர், பூமரத்தடிச்சேனை தவிர்ந்த அனைத்து கிராம மக்களும் இடம்பெயந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் மகாவலி கங்கையின் கிளையான வெருகல் ஆற்றை மேவியும், நாதனோடை என்ற பகுதியிலும் வெள்ள நீரானது அணைக்கட்டை மேவி பாய்ந்த நிலையில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. பின்னர் மாவிலாற்று அணைக்கட்டின் உடைப்பின் ஊடாகவும் வெருகலுக்குள் பெருமளவான வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
பிரதேச செயலகம், ஈச்சிலம்பற்று வைத்தியசாலை ஆகியவற்றில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன் பிரதான வீதியில் 03அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது. அதேபோன்று வெருகல் ஆலயத்தை அண்மித்த பகுதியில் 08 அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்கின்றது. இதனால் இயங்திர படகின் மூலமே போக்குவரத்து இடம்பெறுகின்றது.