தமிழர்களின் வாழ்வியலோடு விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் பின்னிப்பிணைந்தவை.
அந்த வகையில் மற்றொரு பண்டிகையாக தீபாவளி இன்று வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம்.
‘தீபம்’ என்றால் விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபாவளி இன்று
2022 ஒக்ரோபர் 24 ஆம் திகதி, ஐப்பசி 7 ஆம் தீபாவளி 2022 தமிழ் திகதி நாள் திங்கட்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது. அமாவாசை அன்று தான் பொதுவாக தீபாவளி வரும்.
ஆனால் ஒரு சில வருடங்கள் அமாவாசைக்கு முதல் நாளே தீபாவளி வரும். இந்த வருடம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி வருகிறது.
தீபாவளி நல்ல நேரம்
காலை – 6.15 முதல் 7.15 வரை மாலை – 4.45 முதல் 5.45 வரை
தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது?
தீப ஒளித்திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களும் கொண்டாடுகின்றனர். தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது என்ற உண்மையான வரலாறு நம்மில் பலரும் அறியாத ஒன்று.
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு மூன்று விதமான வரலாறுகள் உள்ளன. அந்த மூன்று விதமான தீபாவளி வரலாற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
முதல் வரலாறு
இராமாயணத்தில் இராமன் இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்துவிட்டு மனைவி சீதை மற்றும் சகோதரன் லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார்.
அந்த நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்தநாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
இரண்டாவது வரலாறு
கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றநாளை தீபாவளியாக கொண் டாடப்படுகிறது. இந்த விரதம் முடிந்த அன்று தான் சிவன் சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்த நாரீஸ்வரர் உருவம் எடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
மூன்றாவது வரலாறு
பலவரலாறுகளில் நாம் கீழேபார்க்கப் போகிற இந்த மூன்றாவது வரலாறு தான் மக்களால் அதிகம் பேசக் கூடிய தீபாவளி பண்டிகை வரலாறு ஆகும்.
அதிக மக்கள் கூறும் நரகாசுரனை வதம் செய்த வரலாறு. இரண்யாட்சன் என்ற ஓர் அரக்கன் பூமா தேவியை கடத்திக்கொண்டு போய்பாதாளலோகத்தில் மறைத்து வைத்திருந்தான். அப்போது மஹாவிஷ்ணுவராக அவதாரம் எடுத்து, அரக்கர்களிடம் போரிட்டு பூமாதேவியை காப்பாற்றுகிறார். அதனால் ஏற்பட்ட பரிசத்தால் பூமாதேவிக்கு பவுமன் என்ற அரக்க குணம் கொண்ட மனிதன் பிறந்தான்.
நரகாசுரனின் மண்ணுலக ஆட்சியும், பேராசையும் பவுமன் (நரகாசுரன்) பூலோகத்தை ஆட்சி செய்து கொண்டு இருந்தான். அவனுக்கு பேராசை அதிகரித்து விண்ணுலகத்தை ஆட்சி செய்யவிரும்பினான்.
அதற்காக பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்ம தேவனை நோக்கி கடும் தவம் செய்தான். பிரம்ம தேவன் அவனுக்கு காட்சி தருகிறார்.
நரகாசுரனின் சாகாவரம்
அப்போது பிரம்மதேவன் மனிதனாகப் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும் என்று கூறுகிறார். பெற்ற தாய், மகனை கொல்லமாட்டாள் என்ற எண்ணத்தில், என்னை பெற்ற தாயைத் தவிர வேறயாரும் என்னை கொல்லக்கூடாது என்று வரம் வாங்கிக்கொள்கிறான். அதற்கு பிறகுதான் நரகாசுரன் என்ற பெயர் வந்தது.
விண்ணுலக வெற்றி மனிதனாகப் பிறந்து அசுரனாக மாறிய அந்த நரகாசுரன் விண்ணுலகம் போய் தேவர்கள் எல்லோரையும் வெற்றிகொண்டு அவர்களுடைய பெண் குழந்தைகள் 16 ஆயிரத்து 100 பேரைக் கடத்தி வந்து அவனுடைய அந்தப்புரத்தில் சிறை வைத்தான்.
இந்திரனுடைய தாயார் அதிதி அவர்களின் காது, தோடு மற்றும் வருணனுடைய அரசவைகுடையையும் திருடி எடுத்து வருகிறான். அப்போது மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்திருந்தார், பூமாதேவி சத்யபாமா என்ற பெயரில் அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொள்கிறார். இந்திரன் நரகாசுரனின் செயல்களை கிருஷ்ணரிடம் சொன்னதும், கிருஷ்ணர் சத்தியபாமாவை அழைத்து கொண்டு நரகாசுரனுடன் போர் செய்யக்கிளம்பினார். கிருஷ்ண பரமாத்மாவுக்கும் நரகாசுரனுக்கும் கடுமையான போர் நடந்தது, கிருஷ்ணர் காயமடைந்தது போல் மயங்கி விழுகிறார். அதை பார்த்து கோபமடைந்த சத்யபாமா நரகாசுரன் தனது மகன் என்று தெரியாமல் அம்பு விட்டு தாக்குகிறார்.
நரகாசுரன் இறக்கும் நிலைமைக்கு சென்றுவிடுகிறான். அந்தவேளையில், பூமாதேவியின் அவதாரம் தான் சத்யபாமா என்று அவனுக்கு தெரிகிறது. தன்னுடைய மகனைதன் கையாலே கொன்றுவிட்டதாக எண்ணி சத்யபாமா கண்ணீர் விடுகிறாள். நரகாசுரன் தான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டு, அவனுடைய தாய், தந்தையரிடம் ஒரு வரம் கேட்கிறான். தன்னுடைய இறப்பை துக்கமாக எடுத்துக்கொள்ளாமல் எல்லோரும் சந்தோசமாக கொண்டாடவேண்டும் என்று கேட்கிறான். அதனால் தீபாவளி என்ற பண்டிகை உதயமானது.
இதனால்தான் நரகாசுரனின் இறப்பை, இந்துக்கள் பட்டாசுவெடித்தும், தீபம் ஏற்றியும், கோலமிட்டும், தீபாவளி வாழ்த்துக்களுடனும் கொண்டாடுகின்றனர்.
அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
(காலைக்கதிர்)