இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்க வலியுறுத்தி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்தியாவின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் இந்த அவசர கடிதத்தை எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர் தனது கடிதத்தில்,
“இராமநாதபுரத்தை சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10ஆம் திகதி கடலுக்கு தொழிலுக்கு சென்ற குறித்த ஆறு கடற்றொழிலாளர்களும் சர்வதேச கடல் எல்லையை மீறி கடற்றொழிலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 54 தமிழக கடற்றொழிலாளர்கள், இலங்கை சிறையில் வாடும் நிலையில் தற்போது இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 264 படகுகளும் அந்நாட்டு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
எனவே குறித்த ஆறு கடற்றொழிலாளர்களையும் முன்னதாக கைது செய்யப்பட்டுள்ள 54 கடற்றொழிலாளர்களையும் மீட்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் விஜய் ஜெய்சங்கரிடம் கோரியுள்ளார்.