சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும் முன் நடிகர் விஜய் ஆழமான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
இன்று (செப்டம்பர் 06) யாழ்ப்பாணத்தில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது:
-
கச்சதீவு இந்தியா இலங்கைக்கு வழங்கியதல்ல; சர்வதேச சட்டங்களின்படி அது இலங்கைக்கே சொந்தமானது என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டதால்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1974 ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
-
1600 ஆம் ஆண்டிலிருந்து கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் உள்ளன.
-
ஐ.நா. அமைதிப் பணியில் பணியாற்றிய இந்திய நிபுணர் கண்ணன் ராஜரத்தினும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நடிகர்-அரசியல்வாதி விஜய் கச்சதீவைப் பற்றி பேசுவதற்கு முன், இந்திய மீனவர்கள் மேற்கொள்ளும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆழ்வலை மீன்பிடியின் பாதிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “விஜய், சீமான் போன்றோர் உண்மையில் மக்கள் நலனை சிந்தித்திருந்தால், வன்முறையும் பெண்களைப் போகப்பொருட்களாகக் காட்டும் சினிமாவை விட்டு, Children of Heaven, The Pianist போன்ற கலையுணர்வு படங்களை எடுத்திருப்பார்கள். இவர்களின் சினிமாவிலும், அரசியலிலும் மக்களுக்கு பயன் இல்லை” என அவர் தெரிவித்தார்.
அத்துடன், சீமான் இலங்கைத் தமிழர்களை உண்மையான அக்கறையால் அல்லாது, வெளிநாட்டு தமிழர்களின் நிதியை நோக்கித்தான் பேசுகிறார் என்றும், உண்மையான அக்கறை இருந்திருந்தால் இந்திய அகதி முகாம்களில் இன்னும் துன்புறும் இலட்சக்கணக்கான இலங்கை அகதிகளின் பிரச்சினைகளுக்கு முதலில் குரல் கொடுத்திருப்பார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.