எதிர்க்கட்சி எதைக் கூறினாலும் நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை கலந்துரையாடிய போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து கூறுகையில்,
நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. தனிநபர் பொருளாதாரத்தை வலுப்படுத்தாது தேசிய பொருளாதாரம் வலுவாகாது.
எனவே தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
கொரோனா நெருக்கடி , பொருளாதார பாதிப்பு, இயற்கை அழிவு மற்றும் கப்பல் விபத்து என இலங்கையை சூழ பிரச்சினைகளே உள்ளன. ஆகவே யாருடைய குறைகளையும் நாம் கூற வேண்டியதில்லை.
எனது நாடாளுமன்ற வருகை அவர்களுக்கு தலைப்பு செய்திகளாக இருந்தாலும் நாட்டையும் மக்களையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து உறுதியாகவே நாம் செயற்பட வேண்டும். எதிர்க்கட்சி எதை கூறினாலும் இறுதியில் மக்கள் தீர்மானிப்பார்கள்.
நாட்டினதும் மக்களினதும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கே நான் நாடாளுமன்றம் செல்கின்றேன். பேர்ல் கப்பல் அழிவு குறித்து அரசாங்கம் இன்னும் பொறுப்பற்ற வகையிலேயே செயற்படுகின்றது.
கப்பலில் நைட்ரிஜன் கசிவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்கப்பட்டால் துறைசார்ந்தவர்களும் சுங்க பிரிவினர் மற்றும் வைத்தியர்களே முதலில் கப்பலுக்கு சென்றிருக்க வேண்டும்.
கடும் கடல் காற்றினால் கப்பலில் தீ என நிறுவனம் கூறுகின்றது. ஆனால் கடும் காற்றுடன் கூடிய காலநிலை ஏற்படும் என 24 மணித்தியாலயத்திற்கு முன்னதாகவே வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.
மறுபுறம் சர்வதேசத்தின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளவும் இல்லை. நாடாளுமன்றத்தை கூட்டி இது குறித்து கலந்துரையாடவும் இல்லை.
எனவே கொவிட் வைரஸ் தொற்று எந்தளவு நீண்ட காலத்திற்கு இலங்கையை பாதிக்குமோ அதேயளவான காலம் வரை பேர்ள் கப்பல் ஏற்படுத்திய அழிவுகளும் நாட்டை தொடரும் என தெரிவித்தார்.