கல்வியங்காட்டில் கடை ஒன்றுக்குள் வாள்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தி 5 லட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் நேற்று (பெப்ரவரி 1) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர், யாழ்ப்பாணம் கலட்டிப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு டென்மார்க்கில் இருந்து பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலை ஒன்றின் அபிவிருத்திச் சங்க முரண்பாடு ஒன்று காரணமாக டென்மார்க்கில் உள்ள ஒருவர் பணம் அனுப்பி இந்தத் தாக்குதலை வழிநடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்தில் தென்மராட்சியைச் சேர்ந்த ஒருவர் தொடர்புபட்டுள்ளார் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஊடாகப் பணப்பறிமாற்றம் நடந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது என்றும், சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.