யாழ்பபாணம் வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று ( ஜனவரி 31) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது.
நீதிமன்ற அழைப்பாணைக்கமைய வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்க செயலாளர் , பல்கலைக்கழக மாணவர் ஆகியோர் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகிய நிலையில் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் இருவரும் விடுதலை செய்யப்பட்டதோடு பொலிஸ்நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.ஆனந்தராஜா பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்ற அழைப்பாணை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.