யாழ்ப்பாணம் மாநகர சபைக்காக அமைக்கப்பட்டுவரும் புதிய கட்டடத்தை முழுமைப்படுத்திய பின்னரே ஒப்படைக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கும் – யாழ்.மாநகர சபை முதல்வருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த 27ஆம் திகதி கொழும்பில் உள்ள அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அமைச்சின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய கட்டடத்தை (நகர மண்டபத்தை) தற்போதுள்ள பூரணமாக்கப்படாத நிலையில் மாநகர சபைக்கு கையளிப்பதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அங்கு கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், சபையின் நிதி நிலைமைகளைக் குறிப்பிட்டு பூரணப்படுத்தப்படாத கட்டடத்தை ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டார். அரசாங்கம் தனது முழுமையான நிதியில் இந்தக் கட்டித்தை அமைத்துத்தருவதே சிறந்த அங்கீகாரமாக இருக்கும் என்பதுடன் அதுவே ஏற்புடையதுமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அதையடுத்து மாநகர சபையிடம் மாநகரக் கட்டடம் (நகர மண்டபம்) கையளிக்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட பணிப்பாளர்கள், வடமாகாண பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.