யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பட்டப்பின் படிப்புக்கள் பீடம்,கலைப்பீடத்தின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறையுடன் இணைந்து யாழ்ப்பாணம் தேசியக் கல்வியியற் கல்லூரி,வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரி,வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில் சர்வதேச கல்வியல் ஆய்வு மாநாடொன்றை விரைவில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதா௧.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.ஆ.நித் திலவர்ணன் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கல்விசார் ஆய்வு மாநாடு,கடந்த திங்கட்கிழமை கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்ற போது ஆய்வுக் கட்டுரை அளிக்கைகளின் முதல் அமர்வில் தலைமைவகித்து உரையாற்றிய போதே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எமது பிரதேசம் எதிர்நோக்கும் கல்விசார் சவால்கள் எனும் தொனிப்பொருளில் இந்த ஆய்வு மாநாட்டை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளோம். எமது பிரதேசங்களில் தீர்க்கப்பட வேண்டிய கல்வி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைகளை நாங்கள் கூட்டாகவே தீர்க்க வேண்டும்.வடக்கு மாகாணத்தில் ஆசிரியர் கல்வியை வழங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியியற்துறை. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி,வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியனவும், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு,வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் என்பனவும் இயங்குகின்றன.
நாங்கள் தனித்தனியாக, ஆங்காங்கே செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் அனைவரும் கூட்டாக இணைந்து பணியாற்றினால் எமது சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களை மேற் கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.