யாழ் மையப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டு 24 ஆண்டுகள் கடந்தும் இதுவரை குற்றமிழைத்தவர்கள் கைதுசெய்யப்படவுமில்லை அதற்கான தீர்வு எட்டப்படவுமில்லை என இன்றையதினம் (ஒக்.19) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் யாழ் ஊடக அமைய தலைவர் கு.செல்வக்குமார் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் 39 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்ட போதும் இதுவரைக்கும் எந்த குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லை.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் ஊடகவியலாளர் சிவராம் அவர்களது வழக்கு உட்பட 07 வழக்குகளை துரிதப்படுத்துமாறு அறிவித்துள்ள நிலையில் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் உட்பட்டோரின் வழக்குகளையும் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலி செலுத்தி அஞ்சலிக்கப்பட்டது.