யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (ஜூலை 1) காலை யாழ்ப்பாணம் பொதுச் சந்தைக்கு விஜயம் செய்தார்.
யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் உணவுப்பொருட்களான பனை உற்பத்திப் பொருட்கள், கருவாடு, பழங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்யும் ஆர்வத்தோடு இவ்விஜயத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது சந்தைத் தொகுதி வியாபாரிகள், பொது மக்களையும் சந்தித்த அவர் சிநேகபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.