தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை கோரி சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் யாழ்.நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து நினைவேந்தலுக்கு தடை விதிக்க நீதிமன்று மறுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்க கோரி, கொழும்பில் இருந்து ஹெலி மூலம் யாழ்ப்பாணத்திற்கு நேற்று(செப்ரெம்பர் 21) வியாழக்கிழமை வருகை தந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதானிகள் மனுவை தாக்கல் செய்தனர்.
மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மன்று நினைவேந்தலுக்கு தடை விதிக்க மறுத்துள்ளது.
தடை கோரி மனுதாரர்கள் விண்ணப்பம் செய்த போது, நினைவேந்தலின் போது வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற விடயத்தை பிரதானமாக சுட்டிக்காட்டி இருந்தனர்.
அவ்வாறு எவரேனும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை உடனடியாக பொலிஸார் கைது செய்ய முடியும் பொலிஸாருக்கு தெரிவித்தது.
யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலுக்கு தடை கோரி, யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று முன்தினம் புதன்கிழமை நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இருந்து வந்த குழுவினால் மீள மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விசேட குழுவில் பொலிஸ் சட்டப்பிரிவு பணிப்பாளர் காளிங்க ஜெயசிங்க, சிரேஷ்ட அரச சட்டவாதி சமிந்த விக்கிரம உள்ளிட்டவர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.