அல்வாய் கிழக்கில் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் கிரிசாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 5ஆம் திகதி அல்வாய் கிழக்கில் உள்ள வீடொன்றில் இருந்து ப.தில்லைராணி (வயது-89) என்ற மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
சடலத்தில் காயங்கள் காணப்பட்டதை அடுத்து, மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று அறிக்கையிட்ட பருத்தித்துறை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி பி.வாசுதேவா, உடற்பாகங்களை இரசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பியிருந்தார்.
பகுப்பாய்வு அறிக்கையின்படி மூதாட்டி கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அந்த வீட்டில் வசித்த தம்பதி மற்றும் பணிப்பெண் ஆகியோர் கடந்த 9ஆம் திகதி நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டநிலையில், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்தது நீதிமன்றம்.