மிருசுவில் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய்க்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்கள் எட்டுப்பேரை கொலை செய்த வழக்கில் சுனில் ரத்நாயக்கா என்ற சிப்பாய்க்கு 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
சுனில் ரத்நாயக்க இந்தத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சுனில் ரத்தநாயக்காவின் மனுவை ஏற்றுக்கொண்ட ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் 2017 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி சுனில் ரத்நாயக்காவின் கோரிக்கைக்கு எதிராக ஏகமனதாக தூக்குத் தண்டனையை உறுதி செய்தனர்.
அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ,ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சுனில் ரத்நாயக்கா விடுவிக்கப்பட்டார்.
தற்போது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், நீதியமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சபை ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம் 2024ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளது.