புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவையும், நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட வரைவையும் மீளாய்வு செய்ய வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது. இந்த இரு சட்ட வரைபுகளும் அதிகாரத் தரப்பினருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்குவதுடன் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறுவதாகவும் அமைந்துள்ளன என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்கும்படி ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அதற்குப் பதிலீடாக அரசாங்கத்தால் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
இந்த சட்டம் கருத்துச் சுதந்திரம், ஒன்று கூடும் சுதந்திரம் என்பவற்றைப் பாதுகாக்க தவறியுள்ளது. பயங்கரவாதம் என்ற வரைவிலக்கணத்தின் கீழ் பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கைதுகள், தடுத்து வைத்தல், விசாரணை போன்ற விடயங்களில் நீதித் துறையினரின் கண்காணிப்புப் போதுமானதாக இல்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல், தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக பிரகடனம் செய்தல் போன்ற விடயங்களில் நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டத்தை எடுத்துக்கொண்டால் இந்த சட்ட வரைபு பொதுமக்களின் தொடர்பாடலை கட்டுப்படுத்துவதுடன் அதிகார தரப்பினர் தங்களுக்கு பிடிக்காத விடயங்களை போலியானவை எனக்கூறி கைது செய்வதற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது. அதிலுள்ள சரத்துகள் அதிகார தரப்பினர் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கும் தாங்கள் செய்வது எல்லாம் சட்டப்படிதான் செய்கிறோம் என கூறுவதற்கும் வழி வகுப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஐ.நா. நிபுணர்களுடனும், சிவில் சமூகத்தினருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய திருத்தங்களைச் செய்து சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக புதிய சட்ட வரைவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.