அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று (செவ்வாய்கிழமை) அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானதை அடுத்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான போராட்டங்களில் ஜே.வி.பி. பிரதானமாகச் செயற்பட்டமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
ராஜ்பக்ஷக்களும் ஊழல் மோசடிக்காரர்களும், கொள்ளைக்காரர்களும் ஊழல் மோசடிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை முடக்க முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எம்மை அழைத்து அதன் மூலம் எமது போராட்டங்களை முடக்கி விடலாம் என்று அவர்கள் கற்பனை செய்துள்ளனர். ஆணைக்குழுவிற்கு அழைப்பது மாத்திரமல்ல. எம்மை சிறையிலடைத்தாலும் எமது போராட்டம் கைவிடப்பட மாட்டாது.
இவ்வாறான சிறு செயற்பாடுகள் மூலம் ஜே.வி.யின் போராட்டங்களை நிறுத்தவிட முடியாது என்பதைராஜ்பக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அவ்வாறு எண்ணுவார்களாயின் அது அவர்களது பகல் கனவாகும். தேசிய சொத்துக்களை கொள்ளையிட்டவர்களில் அரசியல் குழுக்களும் உள்ளடங்குகின்றன. இவற்றில் அவன்ட்கார்ட் நிறுவனமும் ஒரு பங்குதாராகும்.
கடற்படையினரால் முறையாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் கோத்தாபய ராஜபக்ஷவின் தலையீட்டினால் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அது பொது மக்களுக்கு உரித்துடைய தேசிய சொத்தாகும்.
எனவே இதனை தனியார்துறை கையகப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. இது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். பல்வேறு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்.
ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். எத்தனை கோடிக்கணக்கான சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ள என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.
அதேபோன்று மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த இவ்வாறான நபர்களுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போராட்டங்களை இவ்வாறான சிறிய அழுத்தங்களுக்காக நாம் ஒருபோதும் கைவிடப் போவதில்லை” என கூறினார்.