இலங்கையின் 1979 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காக இலங்கையின் நாடாளுமன்றம் முன்வைத்துள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான உரிமையின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை கொண்டுள்ளது என்று சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பத்திரிகை சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் கடுமையாகக் குறைக்கும் விதத்தில் காணப்படுகின்றது என்றும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையை சேர்ந்த தனது இணைஅமைப்புகளுடன் சேர்ந்து உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுக்குக் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம், முன்மொழியப்பட்ட நகல்வடிவை மீளப்பெறவேண்டும் என்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்தேச சட்ட வரைவை தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூகத்தினர், சட்டத்துறையினர் ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுப்பவர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் விமர்சித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது காணப்படும் ஸ்திரமின்மைக்கு மத்தியில் இந்த உத்தேச சட்ட வரைவு உடன்படமறுப்பவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீது ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்குப் பயன்படலாம் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என்றும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சட்ட வரைவு பயங்கரவாதத்துக்கான வரைவிலக்கணங்களை சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு அப்பால் விஸ்தரிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் பொதுப்பயன்பாட்டுக்கான இடத்துக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவது, அத்தியாவசிய சேவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் சட்டவிரோதமானது என கருதப்படும் ஒன்றுகூடலில் பங்கேற்பது போன்றவற்றையும் சட்ட வரைவு பயங்கரவாதத்துடன் சேர்க்கின்றது என்றும் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் குற்றஞ்சாட்டியுள்ளது.