சீனாவின் உதவியுடன் இலங்கையில் ரேடர் தளம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பாகவும், மியன்மாரில் இராணுவதளம் ஒன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது தொடர்பாகவும் இந்தியா ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளது என்று இந்திய நாளிதழான “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது.
மியன்மரின் கொக்கோ தீவுகளில் இராணுவத் தளம் ஒன்று உருவாக்கப்படுவதும், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள தொலைதூர செயற்கை கோள் தரவுகளை பெறும் நிலையமும் பிராந்தியத்தில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆழ்ந்த கரிசனையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளன.
இராணுவத் தளமும், தொலைதூர செய்திமதி கண்காணிப்பு நிலையமும் சீனாவின் உதவியுடனேயே நிர்மாணிக்கப்படுகின்றன.
இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் உள்ள கொக்கோதீவுகளில் இராணுவத் தளம் ஒன்று உருவாக்கப்படுவதை அண்மைய செய்மதிப் படங்கள் காண்பித்துள்ளன.
இலங்கையில் தொலைதூர செயற்கை கோள் தரவுகளைப் பெறும் நிலையமொன்றை உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதை விடயமறிந்த வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
சீனாவின் “அக்கடமி ஒவ் சயன்சின்” கீழ் உள்ள “ஏரோஸ்பேஸ் இன்பேமேர்சன் ரிசேர்ச் இன்ஸ்ரிடியூட்” மற்றும் ருகுணு பல்கலைகழகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பின் கீழ் இந்தச் செயற்கை கோள் தளம் உருவாக்கப்படுகின்றது.
இந்தத் தளத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய வளங்களை வேவு பார்க்கலாம் என்றும், பிராந்தியத்தின் தகவல்களை இடைமறித்துக் கேட்கலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்று “தி இந்து” நாளிதழ் தெரிவித்துள்ளது.