நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான புதிய பங்குத்தந்தையாக அருட்பணி பத்திநாதன் அடிகளார் யாழ் மறைமாவட்ட அதிவந்தனைக்குரிய ஆயர் அவர்களால் நியமிப்பு செய்யப்பட்ட நிலையில் இன்று (செப்ரெம்பர் 18) தனது பணிப்பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
இன்று மாலை தூய யுவானியார் ஆலயத்தில் புதிய பங்குத்தந்தை அவர்கள் திருப்பலியை ஒப்புக்கொடுத்து தனது பணிப்பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.
இதேவேளை புதிய குருவை வரவேற்கும் நிகழ்வு பதில் பங்குத்தந்தை அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளார் மற்றும் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரினதும் ஆலோசனைக்கு அமைவாக அருட்பணி சபையின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.
கடந்த இரண்டு வருடங்கள் பங்குத்தந்தையாக பணியாற்றி கடந்த 03/07/2023 அன்று உயர்கல்விக்காக அருட்பணி வசந்தன் அடிகளார் விடைபெற்றிருந்தார்.
இந்நிலையில் அருட்பணி வசந்தன் அடிகளாரின், பணிப்பொறுப்பின் வெற்றிடத்திற்கான நிரந்தர பங்குத்தந்தை நியமிக்கும் வரையில் பதில் பங்குத்தந்தையாக அருட்பணி ஜோண் கனீசியஸ் அடிகளார் தற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவைக்கான புதிய பங்குத்தந்தையாக தந்தையவர்கள் நியமிப்பு செய்யப்பட்டுள்ளமையும் பதில் பங்குத்தந்தை ஜோண் கனீசியஸ் அடிகளார் யாழ் தூய மரியன்னை பேராலயத்தின் உதவி பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.